கண்னேதிரே...
மாடியில் அமர்ந்திருக்கின்றேன், தொட்டியில் மலர வேண்டிய ரோஜா, மொட்டுகளாய் காத்திருக்கின்றன; தேன்ராட்டைப் போல திரண்டு நின்ற, மேகங்கள் மழை பொழிய காத்திருக்கின்றன; சுற்றி நின்ற மரங்களெல்லாம் அசையாமல், காற்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றன; மிளிர்ந்து கொண்டிருக்கும் நிலவும் நட்சத்திரங்களும், மேகங்களின் விலகுதலுக்கு காத்திருக்கின்றன; நடை பழகும் சிறு குழந்தை ஒன்று விழுந்து, எழுத்து நடக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது; எதிர்வீட்டு மாடியில் தாத்தா ஒருவர் தொடர்ந்து வரும், இருமலைத் தடுக்க முயன்று கொண்டிருக்கிறார்; பக்கத்து வீட்டு புது மணப்பெண் கணவனின், அழைப்பிற்கு ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறாள்; பறந்து திரிய வேண்டிய காக்கைகளெல்லாம், பறக்காமல் மாடியில் கரைத்துக் காத்திருக்கின்றன; தாய்க்கு உணவளிக்காத ஒருவன் மிஞ்சிய உணவை, காக்கைக்கு வைத்து பெருமிதத்துடன் அவை உண்பதைக் காண காத்திருக்கிறான்; எழுதும் ஆவலில் அமர்ந்த நான் எங்கிருந்து, ஆரம்பிக்கலாம் என்று காத்திருக்கிறேன்; வெவ்வேறு நிகழ்வுகள் தான் என்றாலும் இவையனைத்தும் தன் அடுத்த நிகழ்வுகளுக்காக காத்திருக்கின்றன, உலகம் இத்துடன் நின்றுவிட...