இருளொளி..
துள்ளியெழுந்து அமர்ந்தேன் படுக்கையில்,
துயிலின் கலவரமதென்பதை உணர்ந்தேன், ஏனெனில்;
தூங்கிக் கொண்டே காலமனைத்தும் கழிந்தாற் போல்,
துக்கமான கொடுங்கனவு கலவரமூட்ட கண்விழித்தேன்;
கனவென்றதும் கான மறுத்து விழித்துக்கொண்டாயே,
கல்லறையில் இக்கனா வந்தால்? காரிருள் வினவியது;
இக்கேள்வி மேலுமென்னை அச்சமூட்ட என் வாழ்வின்,
இன்றுவரை நானழித்த "நொடிகள்" என்னை ஏசியது;
பகற்கனா காணும் வாழ்விழும், பழைமைப் பேச்சிலும்,
பகட்டிலும், பாழாய்ப்போன "நிமிடங்கள்" நிராகரித்தது;
எண்ணத்தையும் உடலையும் உயிரையும் சீராக்கி,
என்னுலகு பயனுற வாழாத "மணிநேரம்" மன்னிக்காது;
நாளை செய்யலாமென்று நானமைத்த செயல்கள்,
நாட்குறிப்பிலேயே மடிந்த "நாட்கள்" நடுங்கச்செய்தது;
வெறுப்புடன் விடிந்த திங்களின் நடுவே ஞாயிருக்காக;
வெறித்து காத்திருந்த "வாரங்கள்" வசைபாடியது;
இறந்தகாலம் எதிர்காலம் பற்றி மட்டுமே கருதி;
இழந்த நிகழ்காலத்தின் "மாதங்கள்" மனங்குமுறியது;
சிறு வயதுதானே!. என்ற சிறுபிள்ளைத்தனத்தால்,
சிறுத்தையாய் கடந்த "ஆண்டுகள்"அச்சுறுத்தியது;
இவ்விருள் வினவியதால் விழித்த என் உள்ளொளி,
இவ்வையகம் தழைக்க வாழ வாய்ப்பு "நேரமென்றது"!;
உறங்கிக் கழிக்கவோ, உட்கார்ந்து போக்கவோ,
உருவாக்கப்பட்டதல்ல "நேரம்" உழைத்துக் கழிக்கவே!.. ;
வரவிடப்பட்ட காலத்தின் செலவுகள் செம்மையானால்,
வாழ்நாட்களனைத்தும் எழுதப்படும் வரலாற்றில்!.. ;
இருளகன்று ஒளி வீசியது, விடிந்தது புலனாயிற்று,
என்னுள் உள்ளொளியால், வெளியில் ஞாயிற்றால்!.....
Comments
Post a Comment