மாற்றம்
மாறாமலிருக்கும் இயற்கை,
மாறிக்கொண்டே இருக்கும்,
மனிதனைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது..,
மாறிக்கொண்டே இருக்கும்,
மனிதன் மாற்றமென நினைத்து,
இயற்கையைத் தாக்கிக் கொண்டே இருக்கிறான்..,
மாற்றம் வேண்டி மனிதன்,
மகத்தான மனிதத்தை மனப்பிறழ்வால்,
தன் பட்டியலில் பிரித்து கொண்டே இருக்கிறான்..,
உயர்வென்று எதை உணர்ந்தானோ?.,
தாழ்வென்று எதை உணர்ந்தானோ?.,
தரங்கெட்ட தரத்தில் மாற்றந்தனை தேடுகிறான்..,
விந்து அண்டத்தில் மோதிய,
வேதிக் கோளாறினால் தோன்றியவன்,
வானத்திலிருந்து குதித்தவன் போல் நடிக்கின்றான்..,
இனமென்கிறான் சாதி மதமென்கிறான்,
இச்சூழ்நிலையை அரசியலாக்குகின்றான்,
இவ்வரசியலால் மனிதர்களுக்குள் வேலியிடுகிறான்..,
கட்சிகளென்றான் கொள்களென்றான்,
காலமாற்றத்தினை கவனித்தால் சாமானியனுக்கு,
கண்ணீரை மட்டுமே பரிசளித்திருக்கிறான்..,
தலைவன் ஒருவன் இருந்தாலொழிய,
தலையெழுத்து மாறாதென்று மனிதன் தன் தலையில்,
தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டான்..,
அத்தலைவன் தத்துவமாவதோடு,
அத்தத்துவ வழிதான் உலகிற் சிறந்ததென்று போதித்து,
அம்முதிர்ச்சியில் தன்னை கடவுளாக்கி கொள்கிறான்..,
இவ்வாறாக ஒவ்வொரு கண்டத்திலும்,
வெவ்வேறு தலைவனும் கடவுளும் பரிணமித்து,
அறியாதவனை பிரித்தான்டு கொண்டே இருக்கிறான்..,
கடவுளின் பெயரால் மதத்தையும்,
பிறப்பால் இனத்தையும், வர்ணத்தால் சாதியையும்,
கொன்றுக் கூறிடும் ஆயுதமாக்கி இருக்கிறான்..,
உழைப்பைத் திருடுகிறான்,
உண்மையை மறைக்கிறான் ஆள்பவன் எதிர்பவனுக்கு,
உடன்படிக்கைப்படி ஒற்றுமையான எதிரியாகிறான்..,
பிரிவினையால் உருவான தலைவனும்,
பிரிந்து கிடக்கும் மக்களும் இருக்கின்ற வரையில்,
நமக்களிக்கப்பட்ட வாக்குரிமை வக்கற்றவை தானோ?..,
மாற்றத்தை விரும்பும் மனிதா,
மதியற்ற பிரிவினை சமுதாயத்தில் நீ தேடும்,
மாற்றம் இச் ஜென்மத்தில் கிடைக்காது, ஏனென்றால்? மாறவேண்டியவனே நீ தானே!. .,
நம்மைச் சூழ்ந்துள்ள வேலிகளை வேரறுத்து,
நம்மியற்கை நமக்களித்த மனிதத்தில் ஒன்றிணைந்தால்,
நம்மை ஆள தனித்தலைவன் தேவைப்படமாட்டான்..,
ஆள்பவனும் இல்லை,
அடிமையும் இல்லை, இவைதானே நாம்,
அண்டிப்பிழைக்கும் இயற்கையின் நியதி!!!....
Comments
Post a Comment