எது அழகு...
அடிப்படையில் அழகு என்பது ஒரு தமிழ் சொல்தான் இதை சீனாகாரனிடம் காட்டினால் அவனுக்கு புரியாது, ஆனால் என்ன ஒரு அழகு என்றால் அவன் மொழியிலும் 美女(Měinǚ) இப்படி சொல் இருக்கிறது. அப்படி என்றால் அழகு என்பது எது? இது தான் அழகு என்று அதற்குண்டான வரம்பை நியமித்தது யார்?
என் சிற்றறிவிலிருந்து, ஒரு புள்ளியில் இருந்து வெடித்து சிதறி சுமார் ஆயிரத்து முன்னூறு கோடி வருடங்களாக எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய பல கோடிக்கணக்கான கிரகங்களும் விண்மீன்களும், இன்னும் சொல்லபோனால் நூறு கோடிக்கும் அதிகமாக நம்மை போல சூரிய குடும்பங்கள் இருக்கிறதாம். இப்பெரும் பிரபஞ்சத்தில் நாம் சூரிய குடும்பத்தின் மதிப்பு எதுவென்றால் பரந்த கடலில் உள்ள சிறிய மண் துகளுக்கு என்ன மதிப்போ அவ்வளவே!..
இத்துகளிலும் படைப்புகள் நிகழவே ஒரு செல்லில் தொடங்கி இன்று பல நூறு கோடி செல் கொண்ட மனித படைப்பு வரை பரிணாமம் அடைந்தாயிற்று.ஆனால் இதில் அழகு என்னும் தத்துவம் எங்கு பிறந்தது?. எங்கென்றால் இத்தனை ஆண்டு கால உயிர் பரிணாமத்தில் அதற்கு சமமாக மனம் எனும் தத்துவமும் பரிணமித்தே வந்தது.
மனம் என்பது ஒன்றுமல்ல உயிரினத்தின் எண்ணப்பதிவுகளே!, இது மனிதனால் மட்டும் உண்டாக்கப்பட்டதல்ல உயிர் எனும் ஆற்றலை கொண்டிருக்கும் அனைத்தும் உருவாக்கிய மனமே "பிரபஞ்ச மனம்" என்றாகியது. மனிதன் தான் இருப்பதிலேயே கடைசி பரிணாமம்., அப்படி என்றால் மனிதன் தோன்றுவதற்கு முன்பே அனைத்து விதமான உணர்வுகளையும் இயற்கை இந்த பிரபஞ்ச மனத்திலிருந்து உருவாக்கியே வைத்திருந்தது.பிரபஞ்ச மனத்தில் அனைத்து உணர்வுகளுக்கும் ஓரே மதிப்பு தான் உயர்வென்றும் தாழ்வென்றும் அதில் பாகுபாடு கிடையாது.
அழகு என்பதும் ஓர் உணர்வுதான் அதை எதனுடனும் ஒப்பிட்டு பார்த்து உணர்ந்து கொள்ளும் விஷயமல்ல அது. இத்தனை கோடி ஆண்டுகளாக பசியும் வலியும் காதலும் காமமும் கோபமும் எப்படி பரிணமித்ததே அவ்வாறே அழகும் பரிணமித்தது. அப்படியானால் அழகு என்பது இப்பிரபஞ்சத்தின் பேருண்மைகளில் ஒன்று!., அதை உணர வேண்டுமானால் மனிதன் தன் மனதை பிரபஞ்ச மனதோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே சாத்தியம். எனவே அழகென்றால் வேறொன்றுமல்ல இந்த அற்புதமான படைப்பில் அசிங்கம் என்று உணர்வதற்கு ஏதுமில்லை என்று உணரும் தெய்வீக மனத்தின் பார்வையில் தான் அழகு பிறக்கிறது.
இத்தகைய அற்புதமான தெய்வீக பிறப்பை மனிதன் இந்த அழிய போகின்ற உடலிலும் முகத்திலும் நிறத்திலும் தேடுகிறான்(ள்). அழியாத உண்மையை அழிந்து கொண்டிருக்கும் ஒன்றில் தேடுவது தான் மனிதனின் மூடத்தனத்தின் உச்சம்..!
தோற்றத்தின் உண்மையில் இருந்து பார்க்கும் மனதிற்கு பார்ப்பதெல்லாம் அழகுதான்.
Comments
Post a Comment