என் விடுதலை...
குழந்தை பருவத்தில்,
குடும்ப பிரச்சினை உதித்தது;
வாலிப பருவத்தில்,
வலியுடன் உறவுகள் முறிந்தது;
படிக்கும் படிப்பில்,
பணத்தாள் தலையிட்டது;
குடும்பச் சுமை,
குற்ற உணர்ச்சியின்றி தலையில் விழுந்தது;
வாய்த்த காதலும்,
வறுமையால் வீழ்ந்தது;
சொந்த சோகங்கள்,
சொந்தபந்தங்களுக்கு வெறுப்பேற்றியது;
சொல்லி அழக்கூட,
சொந்தமில்லா நிலை ஏற்பட்டது;
நட்பே அனைத்துமாகி,
அந் நட்புடன் நாடெங்கும் சுற்ற சுகமுண்டானது;
பேதமில்லா நட்புறவில்,
போதையின் அனைத்து ரகமும் கண்டறியப்பட்டது;
சமுதாய கோட்பாட்டில்,
சற்றும் நம்பிக்கையில்லா நிலை ஏற்பட்டது;
சுடர் விடும் உள் ஒளி,
சுட்டெரிக்கவே தேடல் தோன்றியது;
புத்தகத்தின் அரவணைப்பால்,
பூவுலகில் என் அறியாமை அறுக்கப்பட்டது;
உள்கடந்து சென்றதால்,
உயிரின் உண்மையும் அறிமுகமானது;
பேரமைதி மட்டுமே,
பேரியக்கத்தின் உண்மையான தேடலானது;
சோகங்கள் சோகங்களல்ல,
சோர்வுறும் போது எழுப்பும் மருந்தானது;
வலிகள் வலிகளல்ல,
வசந்தங்கள் பிறக்கும் வழியானது;
வீழ்ச்சிகள் வீழ்ச்சிகளல்ல,
வளர்ச்சியில் கண்காணிக்கும் விழிப்புணர்வானது;
எண்ணமில்லா நிலை,
எல்லைகளற்ற பேரறிவிற்கு விதையானது;
உண்மைத் தேடல்,
ஊக்கம் ஊற்றெடுக்கும் நீரானது;
அனுபவங்கள் அனைத்தும்,
ஆண்டவனை அறிவதற்குண்டான வேரானது;
இம்மரத்தின் வளர்ச்சி,
இவ்வியற்கையின் பேராற்றலில் காத்திருக்கிறது;
இவ்வுண்மை உரைத்திடவே,
இம்மாயை அனைத்தும் விடுதலை பெற்றது
என்னுள்ளிருந்து!!!...
Comments
Post a Comment