மனங்கொள்ளாமை...
புரிய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறேன் எனை,
புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை;
சகல துன்பங்களையும் அறிமுகப்படுத்திய உலகு,
சாமானிய அன்பையும் அமைதியையும் மறுக்கிறது;
விவரமறிந்த காலந்தொட்டு கவனித்து பார்த்தால்,
வாழ்வின் இருளில் மட்டுமே பயணித்திருக்கிறேன்;
காலத்தின் போக்கிலென் உழைப்பென்னும் விதை,
கானகமாகும் கனவு கண்ணெதிரே சிதரி சிதைகிறது;
அறியாமையால் சரிந்திருந்தால் கூட ஏற்றிருப்பேன்,
ஆழ்ந்த அறிவுங்கூட காக்கவில்லை வருந்துகிறேன்;
வெற்றி கிட்டவில்லையே என்பதல்ல என் புலம்பல்,
வெறுமையை மட்டுமே கடப்பதாலிந்த விசும்பல்;
அன்பும் ஆறுதலும் கலந்த வார்த்தைகள் கூட,
ஆற்றாமையால் அக்கினியாய்ச் சுடுகிறது;
நானென் உறவுகளிடமும் நட்புகளிடமுமிருந்து தனித்து,
நாடோடியைப் போல அனாதயாய் அலைகிறேன்;
தவிப்பையிம் வலியையும் தன்னடக்கிக்கொள்வதால்,
தன்னுள்ளேயே போர் புரிந்து மனதை மாய்க்கிறேன்;
தாயன்பைக்கூட தாங்கிக்கொள்ளும் மனநிலையைக்,
தகவலின்றி தற்காலிகமாய்த் தொலைத்திருக்கிறேன்;
பேச்சிலிருந்த நம்பிக்கையும் மூச்சிலிருந்த வேகமும்,
போகிற போக்கில் குறைவதையென்னி அஞ்சுகிறேன்;
காதலும் கடவுளும் ஏனென் கனவுகளும் கூட எனை,
காப்பாற்ற முயன்று முற்றி முடியாமற்ப் போனது;
என்னுள் சுடர்விட்டெறியும் பேரொளயின் சாட்சியாக,
எண்ணித் துணிந்து தான் கனா கண்டேன்;
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதுதே அனுபவம்,
என்று ஏமாற்றத்தையும் அன்போடேற்றிருக்கிறேன்;
சுகபோகத்தையிம் சுயநலத்தையும் பொருட்படுத்தாமல்,
சுடுகாட்டு காக்கைப்போல் சுற்றித் திரிந்திருக்கிறேன்;
கடனால் கலங்கிக் கட்டுப்படாமல் செய்யுந்தொழில்,
காக்குமென்ற நம்பிக்கையால் நாசமாகியிருக்கிறேன்;
முன்னேற்றத்திற்குப்பின்தான் வாழ்க்கையைன்றென்,
முட்டாள்தனத்தால் முற்றிலும் தொலைந்தது வாழ்வு;
அழுதால் ஆறிவிடுமோ?..இவ்வடுக்கள் அல்லது,
அடுத்ததென்னவென்று புத்துயிர்ப்பு பெறுமோ?.. ;
என்னுலகில் என்னுயிர் வாழும்வரை இவையனைத்தும்
என்னை மறுக்கலாம் ஆனால் "மறைக்க" இயலாது,
ஏனென்றால் என்னுள்ளிருக்கும் "வெறுமையை",
எழுதிய நான் என் "முழுமையை" மறைத்திருக்கிறேன்,
காலம் தன் வரலாற்றில் எழுதுமென்ற நம்பிக்கையில்!!!....
Comments
Post a Comment