அடங்(கா)தல்...


ஒரு வரியில் சொல்ல முடிந்திருந்தால்,
என்றோ சொல்லியிருப்பேன்  உன்னிடம்
நான் கொண்ட காதலின் முழுமையை... 

ஒரு கோடி வார்த்தைகளைக் கோர்த்தாலும், 
சொல்ல முடியுமென்று தோன்றவில்லை
என்னுள் இருக்கும் உந்தன் முழுமையை;... 

எல்லை இல்லாமல் என்னுள் கரைந்திருக்கும், 
உன்னை எந்த எல்லையின் உதவியோடு
எடுத்துரைப்பேன் என்னை நீ உணர?... 

நொடிப்பொழுதேனும் உன் நினைவுகள், 
என்னுள் அகன்றிருந்தால் உலகம் நின்றுவிட்ட
உண்மையை உரைத்திருப்பேன் உன்னிடம்!... 

இலக்கியத்திலும் காண்கின்றேன் உன்னை, 
இயற்கையிலும் காண்கின்றேன் எங்குள்ளது
என்னுலகில் நீ இல்லா கிரகிப்பு...

என்றோ நீ பேசிய அழகிய மொழிகளெல்லாம், 
இப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
என்னை கடந்து செல்லும் காற்றில்... 

உன் கண்களை நான் சந்தித்த வேளை, 
உயிரிலிருந்து விசும்பிய உட்குரல் கூறியது
உலகமனைத்தும் இனி இவள் கண் வழியே... 

சிறுவயதில் விரல் பிடித்து நடை பழகியது தான், 
நினைவில்லை என்றால், உன் விரல் பிடித்த கணத்தில்
நான் இவ்வுலகில் இருந்ததாகவும் நினைவில்லை... 

காட்டாற்று வெள்ளம் போல் என்னுள், ஓடிக்கொண்டிருக்கும் உன்னுடன் இலக்கற்று
பயணிக்கின்றேன் ஒரு மரக்கட்டையை போல...

எட்டுத் திசை எல்லாவருக்கும் பொது தான், 
என்றாலும் நீ இருக்கும் திசை மட்டும் என்
உரிமம் பெற காத்துக் கிடக்கிறது...

உன் மனச்சிறையில் சிக்கிய நான், 
உருகி விண்ணப்பித்துக் கொண்டே
இருப்பது ஒன்றுக்குத்தான் ஆயுள் தண்டனை...

முயன்று தான் பார்கிறேன் என்னவளிடம்,
என்னுள் இருக்கும் அவளை பற்றிக் கூற
இதுதான் முழுமை எனக்கூற மறுக்கிறது மனம்!!!... 

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

இருளொளி..

நாளைய உதயம்